×

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.51.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பல பேரிடம் ரூ.51.40 லட்சம் மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் திருவண்ணாமலையில் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சின்னபொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(31), இவரும், திருப்பத்தூர் வினோத்குமார்(43), திண்டிவனம் அருகே மானூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(44) ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 2018ம்(அதிமுக ஆட்சியில்) ஆண்டு செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல்வேறு நபர்களை அணுகி வந்தனர்.

தங்களுக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் அவர்கள் மூலம் ஆசிரியர், அலுவலக உதவியாளர், விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறிவந்தனர். இதை நம்பி செஞ்சி அருகே வளத்தியை சேர்ந்த விக்னேஷ்குமார் ரூ.10 லட்சமும், திருவாரூர் ஆனந்தகுமார் ரூ.5 லட்சம், கெங்கவரம் அமுதா ரூ.17 லட்சம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட திருநாவுக்கரசு, வினோத்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணம் தந்த மூவருக்கும் போலி பணி ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையுடன் வேலையில் சேர சென்றபோது அது போலியாக தயார் செய்த ஆணை என்பது தெரிந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் எஸ்பியிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே திருநாவுக்கரசு, வினோத்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் நூக்கம்பாடி கிராமத்தில் பதுங்கியிருந்த தெரியவந்தது. போலீசார் நேற்று நூக்கம்பாடி சென்று அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோபாலகிருஷ்ணன், தனது நண்பர்களான திருநாவுக்கரசு, வினோத்குமாருடன் சேர்ந்து அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதோடு தனிப்பட்ட முறையிலும் 5 பேரிடம் ரூ.51.40 லட்சம் பெற்றுக்கொண்டு அரசு பணி வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை செஞ்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.51.40 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Thiruvannamalai ,AIADMK ,Chinnaponnambundi ,Senchi, Villupuram district ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது